Skip to main content

புராணம்







  சிவபெருமானின் தோற்றப் புராணம்


                சிவபெருமான் தாழ்ந்த நீண்ட சடையுடையவன். மேகம் தவழும் முடிமேல் சந்திரனை அணிந்து கங்கையைத் தாங்கியவன். மூன்று கண்களை உடையவன். கழுத்தில் விசக் கறை உடையவன். ஒரு கையில் மழுப்படையும் மற்றொரு கையில் கபாலமும் ஏந்தியவன். புலித்தோல் அணிந்தவன். யானைத் தோலைப் போர்த்திருப்பவன். இடபத்தை வாகனமாகவும் கொடியாகவும் பெற்றவன். நெற்றியில் திருநீறு அணிந்தவன். உமாதேவியை ஒரு பாதியாகக் கொண்டவன். இமயமலையைத் தனது இருப்பிடமாகக் கொண்டவன். இங்ஙனம் தோற்றமுடையவராய்ச் சிவபெருமான் இருக்கிறார். இவர் தோற்றத்திற்குரியக் காரணகளைப் பல புராணக் கதைகள் வழியாக அறிந்துகொள்ளலாம்.மேலும்,இக்கதைகள் வழியாக பல அறக்கருத்துகளும் காணமுடிக்கிறது.   

இறைவன் பிறையணிந்த புராணம்

                சிவன் தனது அழகிய சடைமுடியில் சந்திரனை அணிந்து காணப்படுவார்.இறைவன் பிறை அணிவதற்க்கு ஒரு கதை உண்டு . தக்கன் என்பான் அசுவினி முதலிய தன் இருபத்தேழு பெண்களையும் சந்திரனுக்கு மணஞ்செய்து கொடுத்தான். ஆனால் சந்திரனோ உரோகிணி என்பவளிடத்து மட்டும் மிகவும் அன்பு செலுத்தினான். இதனை தக்கன் அறிந்து சினங்கொண்டான். சந்திரனின் கலைகள் அழிந்து போகுமாறு சபித்தான். சந்திரன் தன் பதினைந்து கலைகளும் தேயவே சிவனிடம் அடைக்கலம் புகுந்தான். அப்பெருமான் இரங்கினார். ஒற்றை கலையோடுக் கூடிய சந்திரனைத் தமது சடையிலணிந்தார். மீண்டும் கலைகள் வளரும்படி அருள் புரிந்தார்.   இப்புராணத்தின் வழி உயிர்கள் அனுபவிக்கும் இன்பத்தை வளர்பிறையாகவும்துன்பத்தைத் தேய்பிறையாகவும் ஒப்பிட்டுக் காணலாம்.

புலித்தோல் அணிந்த புராணம்

                சிவன் அணிந்த ஆடைக்கும் அணிகலன்களுக்கும் காரணமும் கதையும் இருக்கின்றன. அதனால் அதனையறிந்து பின் வணங்குதல் சிறப்புடையதாகும். தாருகாவனத்து முனிவர்கள் சிவனை அழிக்கும் பொருட்டு ஒரு வேள்வி செய்தனர்.
                முனிவர்கள் வேள்வித் தீயினின்று ஒரு புலி வெளி வந்தது. அதை சிவன் மீது ஏவினர்.  இறைவன் அந்தப் புலியைக் கொன்றார். அதன் தோலை உரித்து தன் மேனி அரையில் கட்டிக் கொண்டார்.
 இப்புராணத்தில் மனிதனிடம் இருக்கும் அகங்காரம் புலிக்கு ஒப்பிடப்படுகிறது. மிருக உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்காமல் உயர்ந்த உணர்வுகளுடன் மனிதன் நடந்து கொள்ள வேண்டுமென்று அறியமுடிகிறது.

பாம்பணிந்த புராணம்

                வேள்வித் தீயிலிருந்து பாம்புகள் தோன்றின. அவை முனிவர்களின் ஆணையால் சினத்துடன் சென்றன. அந்தப் பாம்புகளைத் திருமாலினது கருடனுக்கு அஞ்சி முன்னமே தம்மிடம் அடைக்கலமான பாம்புடன் ஒன்று சேர எம்பெருமான் அணிந்து கொண்டார்.
                இப்புராணத்தின் வழி சமூக கெட்ட சூழ்நிலைகள் மனிதனின் கழுத்தைச் சுற்றிக் கொண்டுள்ளது. அதனை அண்டாதவாறு மனிதன் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்பதை அறியமுடிகிறது.
வெண்டலை அணிந்த புராணம்
                பாம்புகளும்சிவனிடம் சரண் புகுந்ததால் வெண்டலையை ஏவினர். அதனை இறைவன் தம் கையினால் பற்றித் தலையில் சூடினார்.  இப்புராணத்தில் உலகம் அழியா வண்ணம் சிவன் காத்தற் போல் மனிதன் உலக நலனிலும் கவனம் செலுத்த வேண்டுமென அறியப்படுகிறது.

மழு ஏந்திய புராணம்

                முனிவர்கள் வேள்வியிலிருந்து மழுவினைத் தோன்றுவித்தனர். அதனை சிவன் மீது ஏவினர். இறைவன் அதை ஆயுதமாகத் தம் கரத்தில் ஏந்தினார்.
  மனிதர்களிடம் இருக்கும் தீய சக்திகள் நீங்க வேண்டுமென்று மழு ஏந்திய புராணத்தின் வழி அறியமுடிகிறது.

நெருப்பேற்றிய புராணம்

                இறைவன் தம் கையில் நெருப்பேந்திய வண்ணம் காணப்படுவார். தாருகாவன முனிவர்கள் ஏவிய தீயையே ஏந்தினார். கையில் ஏந்தியவண்ணம் நடனமும் புரிந்தார். இதனை,
இதனை,நெருப்பைச் சாட்சியாக வைத்துச் சொல்வது சத்தியம் ஆகும். இங்குச் சிவன் என்னை நம்பி வாழ்ந்தால் மரண பயமில்லை. இது சத்தியமென மனிதர்க்குச் சிவன் கூறுவது போல் நெருப்பை கையேந்தி நிற்கிறார்.

திருவெண்ணீறு அணிந்த புராணம்

                வெண்ணீறு பூசிய சாம்பல் நிறமுடைய தோற்றத்துடன் சிவன் காணப்படுவார். இதற்கும் ஒரு புராணம் உண்டு. சிவன் அசுரர்களின் முப்புரங்களை எரித்தார். அதில் இருந்த அசுரர் வெந்து வீழ்ந்த நீற்றை அணிந்து கொண்டு சாம்பல் நிறத்தவர் ஆனார்.  இவ்வுலகத்திலுள்ள உயிருள்ள உடல்கள் யாவும் ஒரு நாள் சாம்பலாகத் தான் போகும் என்ற நிலையாமைத் தத்துவத்தை இப்புராணம் உணர்த்துகிறது.
குடர்நெடுமாலை அணிந்த புராணம்
                சிவன் கழுத்தில் மாலைகள் இருக்கும். அம்மாலைகள் எலும்பு முதலியவற்றைக் கோர்த்ததால் ஆனவை. அக்கினி பிரளயக் காலத்தில் உயிர்கள் யாவும் அழிந்தன. அதில் பிரமன்திருமால் முதலிய தேவர்களும் அடங்குவர். அச்சமயத்தில் உலகம் சுடலையாய் தூய்மை உடையதாய்த் தோன்றும். அழியாத் தன்மை பெற்ற சிவன் இறந்தவர்களின் எலும்புகளையும் குடலையும் கோர்த்து மாலையாக அணிந்து திருக்கூத்து இயற்றுவார்.  சிவபெருமானே இவ்வுலகத்தில் ஆதியும் அந்தமாய் அழியாது இருப்பவனென இப்புராணம் காட்டுகிறது.

திருநீலகண்டரான புராணம்

                சிவனின் தொண்டைப் பகுதியில் நீலநிறமாக இருப்பதற்கும் ஒரு கதையும் காரணமும் உண்டு. திருப்பாற்கடலில் அமுதம் கடைவதற்கு மந்தர மாலையை மத்தாக வைத்து வாசுகி’ என்னும் பாம்பை நாணாகக் கொண்டு தேவர் ஒருபுறம் அசுரர் ஒருபுறம் நின்று கடைய ஆரம்பித்தனர். அப்பாற்கடலிலிருந்து திருமகள் கலைமகள் முதலியோர் தோன்றினர். இதனை,

                அக்கடைசலின் போது வாசுகி’ வருத்தம் தாங்காமல் விடத்தைக் கக்கியது. அவ்வாறு எழுந்த விடத்துக்கு அஞ்சி பிரமன் முதலிய தேவர்கள் சிவனிடம் சரண் புகுந்தனர். சிவன் காத்தற்பொருட்டு விடத்தை உண்டார். அனைத்துலகமும் சிவனாரின் உடலுக்குள் அடக்கம். அதனால்அவ்விடம் வயிற்றுக்குள் போவதற்கு முன்னே பார்வதி அம்மையார் தொண்டையில் விடம் நிற்கும்படி அழுத்தினார். நின்ற அவ்விடம் நீலநிறமாக மாறியது. அது முதல் நீலகண்டர்’ என அழைக்கப்பட்டார்.
                சிவன் விடம் தொண்டைக்குக் கீழ் இறங்காமல் பாதுகாத்துக் கொள்கிறார். அது போல் கெட்ட சூழ்நிலைகள் தன்னை அண்டாதவாறு மனிதன் பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும்.

கங்கையணிந்த புராணம்

                சிவபிரான் தன் சடைமுடியில் கங்கை அணிந்து இருப்பார். இதற்கும் ஒரு புராணமுண்டு.
                பகீரதன் மன்னன் வடதேசத்தை ஆண்டு வந்தான். அவன் காலத்தில் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டது. அதனால் அம்மன்னன் திருமால் குறித்து தவம் புரிந்தான். திருமால் அவன் வேண்டியபடி கங்கையாற்றை வரவழைத்தார். கங்கை செருங்கோடு வந்தது. இதனால் உலகம் அழிந்துவிடுமென்ற பயம் கொண்ட மன்னன் சிவனை வேண்டிக் கொண்டான். உலகைக் காக்க சிவன் தன் சடையை விரித்து கங்கையைத் தாங்கினார். அதன் வேகத்தைத் தடுத்து பூவுலகில் பாயச் செய்தார். 

                செருக்கோடு மனிதன் வாழ்ந்தால் அழிவை எதிர்கொள்வான் என்ற கருத்தானது புராணம் வாயிலாகப் பெறபடுகிறது.

யானைத்தோல் அணிந்த புராணம்

                சிவன் யானைத் தோலைப் போர்வையாகப் போர்த்திக் காணப்படுவார்.
                கயமுகாசுரன் யானை வடிவங்கொண்டு மேருமலையில் பிரம்மனை நோக்கி தவஞ்செய்தான். சிவபிரான் தவிர மற்ற ஒருவராலும் அழிக்க முடியாத வரத்தைப் பெற்றான். இதனால் யாவரும் அஞ்சும்படி யானை வடிவில் கயமுகன் வந்தான். இதைக் கண்ட உமாதேவி அஞ்சினாள். சிவன் உக்கிர வடிவமெடுத்து அவனை அழித்தார். யானையின் தோலை உரித்துப் போர்த்தருளினார். இதனை,

                இப்புராணத்தின் வழி யானைத் தோலை உரித்ததுமனிதனின் அகத்திலுள்ள அழுக்குகளை நீங்கல் வேண்டும் என்பதனை உணர்த்துகிறது.
இறைவிக்குச் சிவன் இடப்பாகத்தை அளித்த புராணம்
                இப்புராணத்தில் இறைவன் தனது இடப்பாகத்தை இறைவிக்கு அளித்ததை ஆராயப்படுகிறது.
                பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வலம் வருவதைக் கண்ட உமையம்மை சினங் கொண்டாள். சிவனை வணங்குவோர் தம்மையும் சேர்த்து வணங்க வேண்டுமென்று கௌரி விரதம் மேற்கொண்டாள். விரதத்தின் மகிமையால் தேவியின் விருப்பம் போல் தனது உடம்பின் இடப்பாகத்தை ஈசன் தேவிக்கு அளித்தார். அதனால்ஆண் பாதியாகப் பெண் பாதியாகக் காட்சியளித்து அர்த்தநாரீசுவர்’ என்று அழைக்கப்படுகிறார்.
                இப்புராணத்தின் வழி ஆணும் பெண்ணும் சமம் என்ற கருத்தினை உணர்த்தும் வகையில் உள்ளது.

இடப வாகனம் பெற்ற புராணம்

                வேகம் கொண்ட பல உயிர்கள் இருக்க இடபத்தை வாகனமாக இறைவன் பெற்றதன் காரணத்தை இங்குச் சுட்டப்பட்டுள்ளது. பிரளயக் காலம் தோன்றியது. இதனால்அனைத்துயிர்களும் இறந்தனர். தருமதேவதை அஞ்சினாள். இடபத்தினுருவை எடுத்துக் கொண்டு சிவனிடம் அடைக்கலம் ஆயினாள். சிவன் தனது வாகனமாகக் கொண்டு காத்தருளினார். அதுமுதல் சிவன் இடப வாகனத்தின் மேல் அமர்ந்து அடியார்க்குக் காட்சி அளிப்பார்.
 இப்புராணத்தில்பசுவின் தூய்மைபோல் மனிதன் மனம் இருத்தல் வேண்டுமென அறியப்படுகிறது.

பன்றியின் பல்லை அணிந்த புராணம்

                பன்றியின் பல்லைச் சிவன் தனது திருமார்பில் அணிந்ததை இப்புராணம் சுட்டுகிறது. திருமால் வராக அவதாரமெடுத்து இரணியாக்கன் என்னும் அரக்கனைக் கொன்றார். அப்பன்றியுருவில் பின்னர் வெறிகொண்டு உலகத்தைத் துன்புறுத்தலானார். தேவர்களின் வேண்டுகோள்படி சிவன் அப்பன்றியை அடங்குமாறு அதன் கடைவாய்ப் பல்லைப் பிடுங்கி அணியாகக் கொண்டார்.
   எனவேசிவனுக்கும் மேல் எக்கடவுளரும் இல்லை என்பதை இப்புராணம் வழி உணர முடிகிறது.

குறிப்பு :சிவனின் தோற்றத்திற்கான காரணங்களை கந்தபுராணம் போன்ற                நூல்கள் எடுத்துரைக்கின்றது.

                            _______________________


                                                     சிவனின் அழித்தல் புராணம் 





சிவபெருமான் தொழில்களுள் ஒன்று அழித்தல் ஆகும். இறைவன் தோற்றுவித்த உயிர்களை மீண்டும் ஒடுங்குவதே அழித்தல் ஆகும். மேலும்உலகத்தைக் காக்கவும்தீமைகளை ஒழிக்கவும் இத்தொழில் மேற்கொள்ளப்படுகிறது. சிவன் நெருப்பேந்திய கையானது அழித்தல் தொழிலையே குறிக்கிறது. இத்தொழில்  யாவும் தீய சக்தி கொண்ட அரக்கர்களை அழித்தலும்தேவர்கள் மற்றைய கடவுளருக்குள்ள தீய குணங்களை அகற்றும் பொருட்டும், மக்களுக்கு நற்கருத்துகள் வழங்குவற்காகவும் நடத்தப்படுகிறது.

திரிபுரம் எரித்த புராணம்

                இறைவன் தீமை செய்யும் அசுரர்களிடமிருந்து இவ்வுலகத்தைக் காக்கும் பொருட்டு அவர்களை வதம் செய்கிறார். தாராகசுரன் புதல்வர்கள் வித்யுன்மாலிதாரகாட்சன்கமலாட்சன் என்னும் மூவர். இவர்கள் பிரம்மனிடம் பொன்னிவெள்ளிஇரும்பாலான மூன்று பறக்கும் நகரங்களைப் பெற்றனர். மேலும்மூன்று நகரங்களையும் ஒரே பாணத்தால் அழிக்க வல்லவனால் மட்டுமே தங்களுக்கு மரணம் நேர வேண்டுமென்ற வரத்தையும் பெற்றனர். அசுரர்கள் திரிபுரம் வழியாகத் தாம் நினைத்த இடங்களுக்குச் சென்று தேவர்களையும் முனிவர்களையும் துன்பப்படுத்தினர். தேவர்கள் சிவனை வேண்டி நின்றனர்.
                சிவன் பூமியைத் தேராகவும்திங்களும் ஞாயிறும் தேர் சக்கரங்களாகவும்நான்மறையைக் குதிரைகளாகவும்நான்முகனைத் தேரோட்டியாகவும்மேருமலையை வில்லாகவும்ஆதிசேடனை நாணாகவும்அக்கினியை முனையாக உடைய அம்பாகவும்பிற அமரர்களைப் போர் கருவிகளாகவும் அமைத்துக் கொண்டு போர் செய்யப் புறப்பட்டார்.
       இறைவன் மேருவாகிய வில்லை வளைத்துப் போர் செய்ததார்.  சிவன் திரிபுரத்தை அழிக்க தேவர்கள் செய்த தேரின் மீது ஏறிச் சென்றார். இறைவன் ஏறியவுடனே தேரின் அச்சு முறிந்தது. அதனால்இடப வடிவுடன் திருமால் சிவனைத் தாங்கினார்.

தங்கள் உதவியுடனே இறைவர் போரிட ஆயுதமானார் என்று அமரர்கள் தத்தம் வல்லமையை நினைத்துச் செருக்குக் கொண்டனர். அதனை உணர்ந்த சிவன்அவர்களது உதவியை ஏற்காமல் தானே புன்சிரிப்புச் செய்து அரக்கர் அனைவரையும் முப்புரங்களோடு எரித்தார்.
             
                               "ஏற்றார் மூதூ ரெழில்நகை யெரியின்
              வீழ்வித் தாங்கன்"

என்று சிவன் சிரித்த சிரிப்பினாலேயே திரிபுரம்  எரிந்து வீழ்ந்தது என மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.

அச்சமயத்தில் திரிபுரத்தவர்கள் தலையும் அற்றுப் போனது .இருப்பினும்அம்மூவர்கள் சிவலிங்கத்தை வழிபட்டு வந்ததால் சிவகண பதவியை சிவன் அளித்தாரெனவும்,

                சிவன் திரிபுரம் எரித்த பின் தாமும் அவ்வெற்றிக்குரியவராகக் கருதி இறுமாப்புடையவராய் தேவர்கள் இருந்தனர். அஃதுணர்ந்த சிவன் இயக்க வடிவங்கொண்டு எதிரில் நின்றகாலை அவர்கள் இறைவனை அறியாதிருந்தனர்.
                   "வேடுரு வாகி மகேந்திரத்து
                            மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
                   தேட இருந்த சிவபெருமான்"

என்று தேவர்கள் தேடும்படி சிவன் மகேந்திர மலையில் இருந்ததாக மணிக்கவாசகர்  பாடுகிறார்.

              "முப்புர மாவது மும்மல காரியம்
              அப்புரம் எய்தமை யார்அறி வாரே"

என்று திரிபுரம் எரித்தது என்பது ஆணவம்’, ‘கன்மம்’, ‘மாயை’ என்னும் மன அழுக்குகளை அழிக்கப்படுவதாகக் கொள்ளுதல் வேண்டுமென திருமூலர் கூறுகிறார்.
                இப்புராணத்தில் அசுரர்கள் அழிக்கப்பட்டாலும் சிவபுண்ணியத்தால் அருள் பெறுகின்றனர். தேவர்கள் அகந்தை நீங்க தண்டனை வழங்கப்படுகிறது. எனவேஇறைவன் அவரவர்க்கு ஏற்றவாறே தண்டனையும்அருளும் வழங்குகிறார் என்று அறியமுடிகிறது.

சலந்தரனைத் தடிந்தப் புராணம்


                சிவபெருமான் சலந்தரனை அழித்து  தேவர்களையும் ஏனைய கடவுளரையும் காத்தார்.
                சலந்தரன் என்பவன் அநேக வரத்தால் தேவர்களையும்பிரம்மன்திருமாலையும் வெற்றிக் கொண்டான். உமையம்மை மீது காமங்கொண்டு சிவனை எதிர்க்கவும் செய்தான். அவனை அழிக்கும் பொருட்டு சிவன் தமது கால் கட்டை விரலினால் பூமியில் ஒரு சக்கரத்தை வரைந்தார். அதை அவனை எடுக்கும்படி கூறினார். சலந்தரனால் அதை எடுக்க முடியவில்லை. சிவன் அந்தச் சக்கரத்தைப் பெயர்த்தெடுத்து அவன் மீது வீசினார். அது சக்கராயுதமாக மாறி அவனை வதைத்தது.

           "செழுஞ்சுடர்ப் பரிதியைச் சென்னி கோடலால்
           ஒழிந்திடு சலந்தரன் உச்சி யேமுதல்
           கிழிந்தது----------"

என்று சக்கரம் சலந்தரனின் உடல் முழுவதும் கிழிந்ததாகக் "கந்தபுராணம்" கூறுகிறது. இப்புராணம் வழிஅடுத்தவர் மனைவி மீது ஆசைப்பட்டவர்க்கு அழிவு நேரிடுமென்பது அறியப்பட்டது.

அந்தகாசுரனை அழித்த புராணம்

                தேவர்களின் பயத்தைப் போக்குவதற்கு இறைவன் அந்தகாசுரனை அழித்தார். அந்தகாசுரன் என்னும் அசுரன் தேவர் முதலானவரைத் துன்புறுத்தி வந்தான். சிவனிடம் அநேக வரம் பெற்றதால் அவனை யாராலும் அழிக்க முடியவில்லை. தேவர்கள் அவனுக்குப் பயந்து பெண் வடிவங்கொண்டு கயிலையில் இறைவி கணங்களோடு இருந்தனர். இதை அறிந்து அசுரன் கயிலையில் போர்தொடுத்தான். சிவன் வயிரவமூர்த்தியை அனுப்பினார். அவர் சென்று அவனைச் சூலத்தில் கோத்து நடனம் செய்தார். தன் தவறை உணர்ந்து அவரை வணங்கினான். சிவன் அவன் மீது கருணைக் காட்டி சிவகண பதவியை அளித்தார்.

       இத்தொன்மத்தில் அந்தகாசுரனை அழித்தருளியதில் மனிதனிடம் குடிக்கொண்டு இருக்கும் அசுரத்தன்மையை அழித்தல் இன்றியமையாதது என்பது உணர்த்தும்.

தக்கனை அழித்த புராணம்

                தக்கன் சிவனுக்கு மாமன். தக்கன் செருக்குற்றுச் சிவனை ஒழித்து மற்றைத் தேவர்களை வைத்துக் கொண்டு ஒரு பெரிய வேள்வியைச் செய்தான். தந்தை செய்த வேள்வியைக் காண அழைப்பின்றி உமை வந்தாள். அவளை இகழ்ந்தான் தக்கன்.
                இதனால்சிவன் கோபங்கொண்டு வேள்வியை அழிக்கும்படி வீரபத்திரனை ஏவினார். சிவனின் ஆணையேற்று வீரபத்திரன் தக்கன் யாகத்தை அழித்தான். சினமுற்ற தக்கன் அவனைத் தாக்கினான். வீரபத்திரன் உக்கிரத்துடன் அவன் தலையை வெட்டினான். மேலும் ,எச்சன் யாகத்தின் அதிதேவதை. அவனது தலையும் வீழ்த்தப்பட்டது.  வேள்வியின் குரு வியாத்திரன். வேள்விக்கு உதவியதால் அவனது தலை அறுக்கப்பட்டது.இவர்கள் மட்டுமின்றி திருமால், பிரமன் போன்றவரும் யாகத்தில் கலந்து கொண்டதால் தண்டிக்கப்பட்டனர்.
                சிவனை மதியாத யாகத்தில் கலந்து கொண்டதற்காகத் திருமால் உயிர் மட்டும் உடையவராய் தண்டிக்கப்பட்டார்.
                யாகத்தில் கலந்து கொண்டதற்குத் தண்டனையாகப் பிரம்மன் தலையும்கலைமகளின் மூக்கும் அறுபட்டது.

                தக்கன் யாகத்தில் இந்திரன் முதலான தேவர்களும் கலந்து கொண்டனர். அதற்கேற்ற தண்டனையும் பெற்றனர்.  சந்திரனின் அழகியமுகம் தேய்ந்து அழியும்படி தண்டணயும்,வீரபத்திரன் சந்திரனை அவ்வளவில் விட்டுகதிரவன் பயந்து ஓடவும் அவனது பற்கள் உதிருமாறு கன்னத்தில் அடித்தார் என்ற செய்தியை,

      "சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா றுந்தீபற மயங்கிற்று வேள்வியென் றுந்தீபற"

என்று சூரியன் பற்கள் நெரிந்தமையால் வேள்வி மயங்கிற்றென மணிக்கவாசகர் பாடியுள்ளார். பகன் என்பவன் பன்னிரு சூரியர்களுள் ஒருவன். அவன் தக்கன் யாகத்தில் வந்த தீமைக்காகக் கண் பிடுங்கப்பட்டது.
                தக்கன் அக்கினிக்கு அவியினை  அளித்தான்.  அக்கினி கைகள் அவியை ஏற்று உண்ணத் திரட்டியதால் அவற்றின் கைகள் வெட்டப்பட்டது. என்று அக்கினி கைகள் வெட்டப்பட்டதால் யாகம் நிலைகுலைந்து. இங்ஙனம் தேவர்களுக்குத் தண்டணை அளிக்கப்படுவதைக் கண்டான் இந்திரன். தப்புவதற்காகக் குயில் உருவங்கொண்டு  இந்திரன் மரத்தினில் ஏறி ஒளிந்து கொண்டான் அவனது தோளை வீரபத்திரனால் நெரிக்கப்பட்டது. இத்தண்டணை வழங்கப்படுவதைக் கண்ட மற்றைய தேவர்கள் அஞ்சி ஓடினர். மரணம் வந்தால் அஞ்சுவர் எமனுக்கு. இங்கு எமனே வீரபத்திரனைக் கண்டு அஞ்சினான்.எமனின் உயிரையும்காமன் உடலையும் பறித்தார். இங்ஙனம் வீரபத்திரன் தண்டணையைக் கண்டு திருமாலும் தேவர்களும் மற்றுவரும் சிவனை வழிபட்டு வணங்கினர். சிவன் வீரபத்திரனைத் தடுத்தார். உயிர் இழந்த அனைவரையும் உயிர்ப்பித்தார்.
     தக்கன் தலை தீக்கிரையாகி விட்டதால் ஆட்டுத்தலை பொருந்தி உயிர் பெற்றெழச் செய்தார்.
                தக்கன் தனது தவறுக்கு வருந்தி சிவனை வணங்கினான். சிவபெருமான் அருளோடு யாகத்தையும் நடத்தி முடித்தான்.
                இப்புராணத்தின் வழி எக்காலத்திலும்எத்தன்மையரும் பழித்தல் கூடாதென்ற செய்தியினை அறியமுடிகிறது.

காமனை எரித்த புராணம்

                காமக்கடவுள் காமன். சிவனால் எரிக்கப்பட்டு பின் அருள் பெற்றான்.
                தாராகாசுரன் என்பவன் சிவனின் புதல்வனால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டுமென வரம் பெற்றான். அவன் தேவர்களைத் துன்புறுத்தினான். அதனால்முருகன் பிறப்பதற்குச் சிவன் பார்வதியின் திருமணம் நடக்க வேண்டுமென எண்ணினர்.
                இதன்பொருட்டு சிவன் மோன நிலையிலிருந்து விடுபட இரதியும் காமனையும் வரவழைத்தனர். மன்மதன் இறைவன்மேல் மலர்க்கணையை விடுத்தான். இறைவன் சினங்கொண்டு நெற்றிக்கண்ணை விழித்தார். அதனின்றும் வந்த தீயால் மன்மதன் சாம்பலாயினான்.

                மன்மதனின் மனைவி இரதியின் வேண்டுகோளுக்கு இரங்கி இறைவன் மீண்டும் அவனை எழுப்பினார். ஆனால்அவனது உடல் அவளுக்கு மட்டும் புலனாகும்படி அருளினார். அதனால் மன்மதனுக்கு அனங்கனென்ற பெயர் உண்டாயிற்று.

 இப்புராணம் இல்வாழ்க்கையில் ஈடுபட்டாலும் புலன்களின் இன்பத்துக்கு அடிமையாதல் கூடாதென்று வலியுறுத்துகிறது.


                                          ______________________________________


                                                            அருள் புராணம் 





             இறைவன் தொழில்கள் படைத்தல்காத்தல்அழித்தலென முத்தொழில் ஆகும்.அவையன்றி மறைத்தல்அருளல் தொழிலும் அடங்கும். அருளல்’ என்பது ஆன்மாக்களின் பாசத்தை நீக்கி வீடுபேறு அளித்தலாகும். இறைவன் அருள் புரிவது உயிர்களுக்குப்  பேரின்பத்தைத் தருவதற்காகவும் கொள்ளலாம். 

    ஆடல் வல்லானின் திருநடனம் இறைவன் உயிர்கள் பொருட்டுச் செய்யும் ஐந்தொழில்களைக் குறிக்கிறது. அதில் அருளல்’ என்பது தூக்கிய திருவடி ஆகும். உயிர்களைப் பிறவிக் கடலினின்றும் தூக்கிக்கரை சேர்த்து அருளுவதைக் குறிக்கிறது.

             புராணங்களில் இறைவனது அருளும் கருணையும் கூறப்பட்டுள்ளது. அடியவர்கட்கும்,     பறவை விலங்குகள் போன்ற உயிர்கட்கும்மற்றைய கடவுளர்க்கும்இரங்கி அருள்புரியும் சிவன் நேரடியாகவும்மறைமுகமாகவும் பல வேடங்கள் பூண்டும் உயிர்களுக்கு அருள்புரிகிறார்.

வெள்ளை யானைச் சாபம் தீர்த்த புராணம்

                          


            சாபம் ஏற்ற வெள்ளை யானையின் துன்பத்தை நீங்கி அருள்புரிந்தார் சிவபெருமான்.       முன்பு தேவேந்திரன் வெற்றி வீரனாயப் பூவுலகிலிருந்து தேவலோகம் சென்றான்.அவன் வெற்றியைப் பாராட்டிப் பலரும் கையுறை நல்கினர். துருவாச முனிவர் சிவலிங்கத்தினிடத்துக்    கிடைத்த மலரைக் கொடுத்தார். இந்திரன்  செருக்குற்று அதனை வாங்கித்  தன்   பட்டத்து   யானையாகிய அயிராவதத்தின் மத்தகத்து மேல் வைத்தான். அது அந்த மலரின் அருமையறியாது கீழே தள்ளிக்    காலால் சிதைத்தது. முனிவர் கோபங்கொண்டார். அயிராவதத்தைக் காட்டு யானையாகக் கடவதெனச்   சாபமிட்டார். அவ்வாறே யானை கடம்பவனத்தில் காட்டானையாகப் பிறந்தது. சிவனை நாளும் வழிபட்டது. இறைவனருளால் சாபம் நீங்கி பழைய உருவம் பெற்று தேவலோகத்தை அடைந்தது. இப்புராணத்தை,

                 "விடையவன் வரங்க ணல்கி விடைகொடுத் தருளினானே"

      என்று சிவன் அயிராவதத்திற்குப் பல வரங்களைக் கொடுத்து அருள் புரிந்தாரெனத்   "திருவிளையாடற் புராணம்" எடுத்துரைக்கிறது. இதன் வழி பெரியவர்களிடம் பணிபுரிபவர்கள்     தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதை அறிய முடிகிறது.

பன்றிக் குட்டிக்கு முலை பால் கொடுத்த புராணம்



                     சிவபெருமான் பசியால் துடித்த பன்றிக்குட்டியின் துன்பம் தீர்த்து அருள்புரிந்தார்.
           
   தவஞ்செய்து கொண்டிருந்த ஒரு முனிவரிடம் பன்னிரண்டு இளைஞர்கள் குறும்பு செய்தனர். அம்முனிவர் கோபங்கொண்டு சாபமிட்டார். அதன்படி பன்னிருவரும் காட்டில் பன்றிக் குட்டிகளாய்ப் பிறந்தார்கள்.அக்குட்டிகளின் தாய் இறந்தது. பசியால் குட்டிகள் தவித்தன. தாய்ப் பன்றியாக  இறைவர் வந்தார். அக்குட்டிகளுக்குப் பால் கொடுத்து துன்பம் போக்கினார். அவை பின்னர்  பண்டையறிவு வரப்பெற்றுப் பாண்டியனுக்கு அமைச்சராய்த் திகழ்ந்தன.

                          "ஆன வன்புடைப் பேடையின் வடிவெடுத் தயருங்
            கான வன்பறழ் கலங்கஞர் கலங்கநேர் வந்தார்"

என்று பன்றிகளின் துன்பம் நீங்கும் பொருட்டு இறைவன் தாய்ப்பன்றி வடிவில் வந்தாரெனத்    "திருவிளையாடற் புராணம்" கூறுகிறது. இப்புராணம் மூலம் துன்பம் நேரும் பொழுது பிறர் உதவி         புரிதல் வேண்டுமென்று உணரப்படுகிறது.


கருங்குருவிக்கு உபதேசித்த புராணம்
                              
                     


            துன்பத்தில் இருந்த குருவியின் துயரம் நீங்கி இன்பம் அளித்தார் சிவபெருமான்.
            
 முன்னொரு காலத்தில் கருங்குருவி ஒன்று காக்கைகளால் துன்புறுத்தப்பட்டு வந்தது. அக்குருவி தினந்தோறும் சிவனை வணங்கித் துன்பம் போக்குமாறு வழிபட்டது. இறைவன் அக்குருவிக்கு இரங்கி மந்திரோபதேசம் செய்தார். அதனால் தானும் தன் கிளையும் துன்பம் நீங்கி இன்பம் பெற்றது.

             இச்செய்தியினைத் திருவிளையாடற் புராணம்,
                  
                          "சத்திய ஞான மிர்த்திஞ் சயத்தினை யுபதே சித்தான்"

என்று குறிப்பிடுகிறது.
        
    இங்குக் கருங்குருவி தன் சுற்றத்தினரோடு இருத்தலென்பது மனிதனும் தன் சுற்றத்தினரின்   துன்பத்தை நீக்கி வாழ வேண்டுமென்ற கருத்து புலப்படுகிறது.

புலியானது மான் குட்டிக்குப் பால் கொடுத்த புராணம்

            தாய் இழந்த மான்குட்டியின் துன்பம் தீர்ந்து அருள்புரிந்தார் இறைவன்.

            பண்டொருகாற் பாண்டிய நாட்டில் ஒரு கடப்பங்காட்டில் தனித்து வாழ்ந்தது ஒரு பெண்மான்.     அது தன் குட்டியை ஒரு புதரில் மறைத்து வைத்து நீர் பருகச்சென்றது. அப்பொழுது ஒரு வேடன் அதை   ஓர் அம்பால் எய்து வீழ்த்தினான். அது தன் குட்டியை நினைத்து உயிர் விட்டது. தாயை இழந்த குட்டிக்கு இறைவனருளால் அக்காட்டிலிருந்த ஒரு பெண்புலி பால் கொடுத்து வளர்த்தது. 

ஆகமம் அருளிய புராணம்


            ‘ஆகமம்’ என்பது பதிபசுபாசும்’ என்ற மூன்றையும் கூறுவது ஆகும். இதனைச் சிவனே          படைத்தார். அதனைத் தக்கோர்க்கு அருளவும் செய்தார். ஒரு காலத்தில் உலகம் யாவும் அடங்கின.      ஊழிக்காலம் வர மறைகளும் ஒடுங்கின. பின்னர் சிவன் திருமுன்னர் யாவும் தோன்றின. அப்போது    இறைவன் திருவாக்கிலிருந்து ஆகமங்கள் தோன்றின. 

       ஒரு முறை  இறைவன் அம்பிகைக்கு ஆகம நூற்பொருளை உபதேசித்தார். ஆனால்இறைவி அதிற்    போதிய நாட்டம் செலுத்தவில்லை. அதனால்உமை இறைவனது சாபமேற்று வலைஞனுக்கு மகளாய்    பிறந்தாள். இதைக் கேள்வியுற்ற     மூத்த பிள்ளையாரும்,       இளைய பிள்ளையாரும் இறைவனது        திருமுன்பு வந்தனர். அவர் கையிலிருந்த ஆகம நூல்களை வாங்கிக் கடலிலே வீசி எறிந்தனர். சமயம் தெரியாது     இவர்களை உள்ளே அனுமதித்த நந்தி தேவரும் கடலிலே சுறாமீனாகும்படி சபிக்கப்பட்டார். பின்பு இறைவனே   சாபம் தீர்க்க வேண்டி வலைஞனராய் வந்தார். நந்திதேவர் ஆகமத்தைத் தாங்கிய வண்ணம் கடலில்          சுறாவாக மீனவர் வலைக்குத் தப்பித் திரிந்தது. வலைஞரான சிவன் சுறாவினைப் பிடித்தார்.     பின் சாபத்தையும் நீக்கினார். இறைவியாகிய வலைஞமாதை மணந்து விமோசனமும் அளித்தார்.

            இறைவர் மீட்டிய ஆகமத்தைக் கொண்டுத் திருவுத்தரகோச மங்கை’ என்னும் தலத்தில்   அம்மையாருக்கும்அறுபதினாயிரம் சிவனடியார்க்கும் சிவயோகிகளுக்கும் நூற்பொருளை உபதேசித்தார்.  இதனை,


             "பங்கிருந் தவட்கு வேதப் பயனெலாந் திரட்டி முந்நீர்ப்
      பொங்கிருஞ் சதைபோ லட்டிப் புகட்டினான் செவிக ளார"

என்று இப்புராணத்தைத் "திருவிளையாடற் புராணம்" விரித்துக் கூறுகிறது. இப்புராணத்தில் சிவன்     தண்டனை அளித்தாலும் இறுதியில் அருள்புரிகிறார். மேலும்நன்மை பொருட்டு ஒருவர் அளிக்கும்       தண்டனை ஏற்பது பயன்தரும் என்பது அறியமுடிகிறது.

தாருகாவன மகளிருக்கு அருளிய புராணம்

            சாபமேற்ற பெண்களின் துன்பம் நீங்க இறைவன் அருள்புரிந்து அருளினார்.

            தாருகாவன முனிவர்கள் இறைவன் மீது பற்று அற்றவர்கள். அவர்கள் போக்கை மாற்றுவதற்குச்    சிவன் பரதேசி கோலத்திலும்திருமால்  மோகினி உருவங்கொண்டும் சென்றனர். சிவன் தாருகாவன பெண்களிடம் பிச்சைக் கேட்டார். அப்பெண்கள் அவரின் அழகில் மயங்கினர். இதனால் முனிவர்கள்    கோபங்கொண்டு சபித்தனர். அதன்படி மதுரையில் வணிக மகளிராய்ப் பிறந்தனர். சிவன் அவர்களுக்கு அருளும் பொருட்டு வளையல் வியாபாரியாக வந்தார். சாபமேற்ற ஒவ்வொரு பெண்ணுடைய கரங்களிற் வளையல்களைப் பூண்டினார். அவ்வளவில் அப்பெண்களின் சாபம் நீங்கப் பெற்றது. இதனை,

                      "மறந்துதும்பு வேனெடுங்கண் வணிகமாதர் சிறிதுநாள்
          துறந்தரன்ற னருளடைந்து துணையடிக்கண் வைகினார்"

என்று இறைவன் வளையல் வியாபாரியாய் வந்ததைத்"திருவிளையாடற் புராணம்" எடுத்துரைக்கிறது.      பெண்கள் தங்கள் மனதை அலைபாய்தல் இல்லாமல் வைத்தல் வேண்டுமென இப்புராணம் உணர்த்துகிறது.


             

Popular posts from this blog

சிவபெருமானின் தோற்றப் புராணம்

     

சிலப்பதிகாரக் கிளைக் கதைகள்

                                    

சிவனின் அழித்தல் புராணம்